புதுடெல்லி: நல்லாட்சிக்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் டெல்லியில் நடை பெற்ற பயிலரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் பேசியதாவது:
2023-ம் ஆண்டு இறுதிக்குள் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு செயற்கை நுண்ணறிவு(ஏஐ), பிளாக் செயின், இயந்திரக்கற்றல் போன்ற பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும். சுமார் 30 லட்சம் அரசு ஊழியர்களுக்கு இந்த பயிற்சியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
25 மத்திய பயிற்சி நிறுவனங்கள், 33 மாநில அளவிலான நிர்வாகப் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மக்கள் சேவை தொடர்பான பயிற்சி நிறுவனங்கள் போன்றவை உருவாக்கப்படும். இந்த நிறுவனங்களின் மூலம் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பயிற்சி தரப்படும்.
இதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் வருமான வரி செலுத்துவதில் அரசுகளை ஏமாற்ற நினைப்பவர்களை எளிதில் கண்டறியலாம். பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் தரவுகளை பாதுகாப்பாக அனுப்பவும் முடியும். இவை அனைத்துமே தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பங்களை அதிக அளவில் புகுத்தி வருகிறது. இதனால் இந்தியா மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது.
ஜன்தன் வங்கிக் கணக்கு, கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் அட்டையை அடையாளமாகப் பயன்படுத்துவது, மானியத் தொகையினை நேரடியாக பயனாளரின் வங்கிக் கணக்கில் செலுத்துவது போன்றவை நிர்வாக சிக்கல்களை எளிதாக்கியுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி என வரும்போது நாடும் அதன் குடிமக்களும் அதை பயின்று வேகமாக வளர்ந்து வருகின்றனர். பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு குறியீட்டுமுறை மற்றும் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய முன்னேற்றங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். வேலை மற்றும் விளைவுகளை மேம்படுத்தக்கூடிய புதிய அறிவியலை எப்போதும் நாம் தேட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.