OneWeb India-1 மிஷன்… ஒரே ராக்கெட்டில் 36 சாட்டிலைட்- ஜெயித்து காட்டிய இஸ்ரோ!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பி தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒன்வெப் (Oneweb) நிறுவனம் தயாரித்த 36 பிராட்பேண்ட் செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III என்ற ராக்கெட் மூலம் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு இஸ்ரோ ஏவியது. ஒன்வெப் என்பது இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கக் கூடிய ஒரு தனியார் நிறுவனமாகும்.

சர்வதேச அளவில் அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இணைய வசதிகளை ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கிறது. ஒன்வெப் மிஷனிற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் 6 டன் எடையை தாங்கியபடி GSLV MK-III ராக்கெட் விண்ணிற்கு சென்றுள்ளது. இவ்வளவு பெரிய எடையை இஸ்ரோ ராக்கெட்கள் தாங்கிச் செல்வது இதுவே முதல்முறை.

இதன்மூலம் இஸ்ரோ புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. LVM-3ன் வர்த்தக ரீதியிலான முதல் ஏவுதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிஷன் ஒன்வெப் மற்றும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NSIL ஆகியவற்றின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சாத்தியமானது. ஒன்வெப் செயற்கைக்கோள்களை பொறுத்தவரை LEO எனப்படும் புவியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதையில் 1,200 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள்களின் நோக்கம் இணைய சேவையை அளிக்க சாத்தியமில்லாத பகுதிகளில் கொண்டு சேர்ப்பதே ஆகும். இதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து ஒன்வெப் நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்தகட்டமாக ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் இஸ்ரோ மூலம் வரும் 2023 ஜனவரியில் ஏவப்படவுள்ளன.

இதுதொடர்பாக பேசிய இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.சோமநாத், LVM3 ராக்கெட் மூலம் ஒன்வெப் என்ற தனியார் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இதற்காக 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கப்பட்டது. மீண்டும் இதே நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை அடுத்த ஆண்டின் முதல் பாதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. LVM3 ராக்கெட் பயன்பாட்டை வர்த்தக ரீதியில் கொண்டு வரவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு நிறைவேறியுள்ளது. மத்திய அரசு அளித்த முழு ஒத்துழைப்பால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. ஒன்வெப் மிஷன் மூலம் எங்களுக்கு முன்கூட்டியே தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.

LVM3-M2 மிஷன் மூலம் விண்வெளி துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. PSLV உறுதுணையுடன் தாழ்வான புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி வருங்காலங்களில் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்யப் போவதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.