சுக்கு நூறாகும் அமித் ஷா வியூகம்? கார்கே எடுக்கும் பிரம்மாஸ்திரம்- அனல் பறக்கும் குஜராத் அரசியல்!

மூன்று ஆண்டுகளாக
காங்கிரஸ்
கட்சிக்கு இருந்த தலையாய பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. வரும் 26ஆம் தேதி கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்க உள்ளார். தெற்கிலிருந்து ஒரு சூரியன் போல அக்கட்சி இனிமேல் வெற்றிப் பாதையை நோக்கி செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பதவியேற்பு விழா முடிந்ததும் கார்கேவிற்கு இருக்கும் முக்கியமான வேலை குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு சரியான வேட்பாளர்களை தேர்வு செய்வதாகும். இதற்காக கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அடுத்த சில மாதங்களில் அறிவிப்பு வெளியாகிவிடும். எனவே முன்கூட்டியே தயாராக வேண்டியது அவசியம். குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை 24 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. இதன்மூலம் தனது கோட்டையாக அக்கட்சி கருதி வருகிறது.

அதுமட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் சட்டமன்ற தேர்தல் வெற்றியை இருவரும் கவுரவப் பிரச்சினையாக பார்க்க வாய்ப்புள்ளது. எப்படியாவது வெற்றி பெற அமித் ஷா பல்வேறு வியூகங்கள் வகுத்து செயல்படுவார். இதை முறியடிக்க யாராலும் வீழ்த்த முடியாத பிரம்மாஸ்திரம் போன்ற ஆயுதத்தை புதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கையிலெடுக்க வேண்டும்.

கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தீவிர களப்பணியாற்றியதற்கு பலன் கிடைத்ததை மறுக்க முடியாது. ஏனெனில் 1995ல் முதல்முறை ஆட்சியை பிடித்ததில் இருந்து 2014 வரை மூன்று இலக்க வெற்றியை பாஜக பதிவு செய்து வந்தது. ஆனால் 2017ல் முதல்முறை 99 என இரண்டு இலக்க வெற்றியை பாஜக பெற்றது. 77 என கூடுதலாக 16 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்.

ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் காங்கிரஸிற்கு உத்வேகம் கொடுத்தது. இதற்கு கெலாட்டின் வியூகமும் ஒரு காரணம். இப்படிப்பட்ட சூழலில் வரும் சட்டமன்ற தேர்தலை சரியாக பயன்படுத்தி கொண்டால் ஆட்சி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் குஜராத் சென்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பாரதிய பழங்குடியின மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகளை சந்தித்து பேசினார்.

இம்முறை கிராமப்புற பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்த காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. அதற்கு பலம் சேர்க்கும் வகையில் கார்கேவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 55 நகர்ப்புறப் பகுதிகளை சேர்ந்தவை. இதில் 46 இடங்களை பாஜக தன்வசம் வைத்துள்ளது. நகர்ப்புற வாக்குகளை கவருவதில் ஆம் ஆத்மி சிறப்பாக செயல்பட்டு வருவதால் காங்கிரஸ் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் வருகை எந்த வகையிலும் காங்கிரஸிற்கு பின்னடைவை ஏற்படுத்தாமல் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் மாநில பாஜகவில் சில சலசலப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் எப்படி காய்களை நகர்த்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.