இந்திய மருந்து தயாரிப்பு: சவுமியா சுவாமிநாதன் யோசனை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 69 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய அரசு, காம்பியா நாட்டு குழந்தைகள் இறப்புடன் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்கு ஆளான மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் இருமல் மருந்து தயாரிப்புகளுக்கு தடை விதித்துள்ளது. உலக அளவில் மருந்து தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்தியாவுக்கு இந்த சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் நமது மதிப்பும் குறைந்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா வலுவான தரக் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டிருப்பது மிக அவசியம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புன் (DCVMN) 23ஆவது ஆண்டு பொதுக்குழுவின் நிகழ்வு தொடர்பாக புனே சென்றுள்ள சவுமியா சுவாமிநாதன், “இந்திய மருந்துத் துறை மீதான மதிப்பை காப்பாற்றுவதற்கும், சர்வதேச அளவில் மருந்துத் தயாரிப்பில் முன்னணி நாடாக நீடிப்பதற்கும் இந்தியா வலுவான தரக் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டிருப்பது மிக அவசியம். தற்போது தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் இருக்கும் குறைகளை கண்டறிந்து அதை வலுப்படுத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

“மத்திய மற்றும் மாநில தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நம்மிடம் உள்ளது. நாம் செயல்பாட்டு விதிகளைப் பார்த்து, இவற்றை எவ்வாறு ஒத்திசைக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். மத்திய மற்றும் மாநில தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும். நாட்டில் விற்கப்படும் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் பற்றி இணைந்து பகுப்பய்வு செய்ய வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அமைப்பில் உள்ள குறைகளை கண்டறிந்து வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மருந்து தயாரிப்பில் கலக்கப்படும் பொருட்கள் ஒரு தீவிரமான பிரச்சினை என்று குறிப்பிட்ட சவுமியா சுவாமிநாதன், டைதிலீன் கிளைகோல் கலப்பினால் ஏற்பட்ட பிரச்சினை என்பதை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காம்பியா நாட்டில் குழந்தைகள் மரணத்துடன் தொடர்புடைய சிரஃப்புகளின் மாதிரிகள் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில், எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத அளவு இருந்தது கண்டறியப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.