ICC T20 WC: ஆதிக்கம் செலுத்திய ஸ்பின்னர்கள்; அசராமல் ஆடிய மெண்டீஸ் – அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை!

சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்துக்கு எதிராக மோதிய இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.

ICC T20 WC | SL v IRE

ஸ்டெர்லிங் உடன் பேட் செய்ய வந்த பால்பிர்னி லஹிரு குமாரா வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே போல்டானார். பின்னர் அனுபவசாலியான ஸ்டெர்லிங் 34 ரன்களுக்கு தனஞ்செய டி சில்வாவின் பந்தில் ஆட்டமிழக்க, அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க அந்த அணி தத்தளிக்க ஆரம்பித்தது. எந்த பேட்ஸ்மேன்களும் குறிப்பிடத்தக்க வகையில் ஆடவில்லை என்பது பெரிய சோகம்தான். அணியை நல்ல ஸ்கோர்க்கு நகர்த்த டெக்டர் மட்டும் தனியாளாகப் போராடி 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  இன்னிங்ஸ் முடிவில் அயர்லாந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியின் ஸ்பின்னர்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். வனிந்து ஹசரங்கா, மஹீஸ் தீக்சனா, தனஞ்செய டி சில்வா மூவரும் இணைந்து 10 ஓவர்களை வீசி 57 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

ICC T20 WC | SL v IRE

இலங்கையின் ஸ்பின்னர்கள் வெளிக்காட்டிய ஆதிக்கத்திற்கு ஈடான பெர்ஃபார்மென்ஸை அயர்லாந்து பேட்ஸ்மேன்களால் கொடுக்க முடியவில்லை.

129 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் சிறப்பான தொடக்கத்தை அமைத்துத் தந்தனர். 63 ரன்களுக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. பின்னர் வந்த அசலங்கா மெண்டிஸ் உடன் இணைந்து அணியை வெற்றி பெற வைத்தார். சமீபகாலமாக ஃபார்மின்றி தவித்த அசலங்கா களத்தில் பொறுமையாக ஆடி ரன்களைச் சேர்த்தது இலங்கைக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்திருக்கும்.

15வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த குசல் மெண்டிஸ், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

ICC T20 WC | SL v IRE

வெஸ்ட் இண்டீஸை வென்ற அயர்லாந்து இலங்கை அணிக்கு எதிராக நிச்சயம் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் மொத்தமாகச் சரணடைந்தனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த அயர்லாந்து ஆடுகளத்தைச் சரியாகக் கணிக்கவில்லையோ என்ற கேள்வியை எழுகிறது. இலங்கை அணி இதே போன்ற ஆதிக்கத்தை தன் பிரிவில் உள்ள மூன்று பெரிய அணிகளுடனும் தொடர்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.