இந்திய சினிமாவில் சமீபகாலமாக வரலாறு மற்றும் புராண கதைகள் தொடர்பாக படங்கள் வெளிவருவது அதிகரித்துள்ளது. இதற்கு அச்சாரமாக இருந்தது பாகுபலி படம்தான். அந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் செய்த வசூல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக நீண்ட காலமாக பேச்சாக மட்டுமே இருந்த பொன்னியின் செல்வன் படமும் பாகுபலிக்கு பிறகே உருவாக்கப்பட்டது. அதேபோல், பிம்பிசாரா, பத்மாவத், உள்ளிட்ட படங்களும் வெளியாகியுள்ளன.
தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தை தழுவி இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதில் சைஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றன. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடுமையான ட்ரோலை சந்தித்தது. ஓம் ராவத் இயக்கியிருக்கும் இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வருகிறது.
இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், ராமாயணம் திரைப்படமாக உருவாக்கப்படுமென்று கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு அதுகுறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அவரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் அறிவித்த ராமாயணம் படம் நின்றுவிடவில்லை. அதனை நிச்சயமாக திரைக்கு கொண்டு வருவோம். தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பணிகள் நடக்கின்றன.6 மாதங்களுக்கு ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று, அடுத்ததாக படப்பிடிப்புக்கு தயாராகிவிடுவோம். நாங்கள் அறிவித்தபோது இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடி இருக்கும் என்று மதிப்பிட்டு இருந்தோம். இன்றைய சூழலில் இந்த பட்ஜெட் இன்னும் அதிகமாகலாம்” என்றார்.
அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு சிறிய பிரேக் எடுக்கும் அல்லு, அடுத்ததாக ராமாயணம் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அதேசமயம், அல்லு அர்ஜுனுக்கு புராண படங்கள் ஒத்துவருமா என்பதையும் யோசிக்க வேண்டுமென்று அவர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.