நம்மவர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தைவிட பிள்ளைகளின் எதிர்காலம் மீதுதான் அதிக அக்கறை இருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடாகக் குழந்தை பிறந்ததும் அவர்கள் பெயரில் ஆர்.டி, எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என ஆரம்பித்துவிடுகிறார்கள். மேற்கண்ட முதலீடுகளில் வருமான விஷயத்தில் முன்னணியில் இருப்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும்.

வெள்ளி விழா ஃபண்ட்கள்..!
இந்தியாவில் இரண்டு சில்ட்ரன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 25 ஆண்டுகளைக் கடந்து வெள்ளி விழா கண்டுள்ளன. அந்த ஃபண்ட்கள் கொடுத்துள்ள வருமானம் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா என்கிற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
சிறுவர்களுக்கான இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடந்த 25 ஆண்டுகளில் இரட்டை இலக்க வருமானத்தைக் கொடுத்திருப்பது நல்ல விஷயம்தான். இந்த இரு ஃபண்ட்களும் ஆரம்பம் முதல் தலா ஆண்டுக்கு சராசரியாக 10.11% மற்றும் 12.53% வருமானம் கொடுத்திருக்கின்றன.
பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முக்கிய வகையான ஹைபிரிட் ஃபண்ட்கள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் எதிர்பார்க்கலாம். அந்த வகையில் இந்த ஃபண்டுகள் கொடுத்திருக்கும் வருமானம் அதையொட்டியே இருக்கின்றன. நாட்டின் நீண்ட கால பணவீக்க விகிதம் 5 – 7 சதவிகித அளவுக்கு இருக்கும் நிலையில் இந்த ஃபண்டுகளின் வருமானம் மோசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

செபி அமைப்பின் வரையறை..!
சிறுவர்களின் எதிர்காலத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தாலும், 2017 -ம் ஆண்டுதான் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி அமைப்பு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மறுவரையறை செய்யும்போது தீர்வுகள் அடிப்படையிலான ஃபண்டுகளின் கீழ் சில்ட்ரன்’ஸ் ஃபண்டுகளைக் கொண்டு வந்தது, இந்த ஃபண்டின் முதலீட்டு லாக் இன் (Lock-in) காலம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது பிள்ளைகள் மேஜர் வயதை அடையும் வயது (Child attains age of majority), எது முந்துகிறதோ அது எடுத்துக்கொள்ளப்படும்.
25 ஆண்டுகளைக் கடந்த சிறுவர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாக யு.டி.ஐ சில்ட்ரன்ஸ் கேரியர் ஃபண்ட் (UTI Children’s Career Fund), டாடா யங் சிட்டிசன்ஸ் ஃபண்ட் (Tata Young Citizens Fund) ஆகியவை உள்ளன.
வருமானம் எப்படி?

யு.டி.ஐ சில்ட்ரன்ஸ் கேரியர் ஃபண்ட்
இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம்தான் பிள்ளைகளின் எதிர்கால செலவுகளுக்கு தேவைப்படும் தொகையை ஈடுகட்டும் விதமாக இன்றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன் சிறுவர்களுக்கான முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை யு.டி.ஐ சில்ட்ரன்ஸ் கேரியர் ஃபண்ட் என்கிற பெயரில் ஆரம்பித்தது.

இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு ஹைபிரிட் ஃபண்ட் ஆகும். ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 10.11% வருமானம் கொடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 4,144 கோடி நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் வருமானத்தைவிட பல முறை அதிக வருமானம் கொடுத்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 11% வருமானம் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையை 6.7% மற்றும் 9.98% வருமானம் கொடுத்திருக்கிறது.
டாடா யங்க் சிட்டிசன்ஸ் ஃபண்ட்
இந்த ஃபண்ட் பிள்ளைகளின் உயர்கல்வி செலவுகளை சாமாளிக்கும் நோக்கத்தோடு 1995-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது.
இந்த ஃபண்ட் கிட்டத்தட்ட ஃபிளெக்ஸி கேப் போல் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது, அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் கலந்து கட்டி முதலீடு செய்யப்படுகிறது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கொடுத்து வருகிறது.

இந்தத்திட்டத்தில் மூலம் ரூ. 269 கோடி நிர்வகிக்கப்படுகிறது. செலவு விகிதம் 2.56% ஆக உள்ளது. பல முறை அதன் பெஞ்ச் மார்க்கான நிஃப்டி 500 குறியீட்டைவிட அதிக வருமானம் கொடுத்துள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 17.70% வருமானம் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையை 9% மற்றும் 10.80% வருமானம் கொடுத்திருக்கிறது.
பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் கல்யாணத்துக்கு பெயரில் சில்ட்ரன் இருக்கிறது என்பதற்காக இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தேவையில்லை. அதேநேரத்தில், பிள்ளைகளின் கல்விச் செலவு, கல்யாணச் செலவுகளில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என நினைப்பவர்கள் சில்ட்ரன்ஸ் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.
அதேநேரத்தில் முதலீட்டுக் காலம் சுமார் 10 – 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில் இந்த சில்டரன்ஸ் ஃபண்டுகளுக்கு பதில் ஓரளவுக்கு அதிக ரிஸ்க் கொண்ட அதேநேரத்தில், சில்ட்ரன்ஸ் ஃபண்டுகளைவிட ஆண்டுக்கு சராசரியாக 2 – 3 சதவிகித அதிக வருமானம் அளிக்கும் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்டுகள், மல்டி கேப் ஃபண்டுகள், லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.