தொடரும் ஒருதலை காதல் குற்றங்கள்..காதலிக்க மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – இளைஞர் கைது

காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணை கத்தியால் குத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததில் படுகாயமடைந்த பெண், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் முத்துராஜ் (வயது 25) என்பவர் அதே பகுதியில் உள்ள ஹேமலதா என்ற (24 வயது) தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண் தொடர்ந்து காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் முத்துராஜ், பெண்ணின் வீட்டிற்குச் சென்று பெண்ணின் தாய் தந்தை முன்பாகவே மறைத்து வைத்திருந்த கத்தியைக்கொண்டு கழுத்து, முதுகு, கைகளில் தொடர்ந்து கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்துள்ளார்.

image

இதனிடையே பெண்ணின் அலறல் சத்தம் மற்றும் தாய் தந்தையரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் கைதுசெய்து பெரியகுளம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காயமடைந்த பட்டதாரி பெண்ணுக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணை பெண்ணின் வீட்டிலேயே சென்று கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.