பீஜிங் : சீன அதிபர் ஷீ ஜிங்பிங், 69, தொடர்ந்து மூன்றாவது முறையாக அந்தப் பதவியில் நீட்டிக்கும் வகையிலான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
நம் அண்டை நாடான சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. கட்சியின் சட்டவிதிகளின்படி, அதிபர் பதவியில் ஒருவர் தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்க முடியும்.
இதன்படி, 2012ல் அதிபராக பதவியேற்ற ஜிங்பிங்கின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது.
கட்சி, ஆட்சி மற்றும் ராணுவத்தின் தலைமை பொறுப்புகளை தன் வசம் வைத்துள்ள ஜிங்பிங், சீனாவின் மிகவும் வலுவான தலைவராக பார்க்கப்படுகிறார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் ஜிங்பிங் தொடரும் வகையில் பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் சட்டத்திலும் இதற்கான திருத்தம் செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு நடந்தது. ஒரு வாரத்துக்கு நடந்த இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று, ஜிங்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் தொடரும் வகையில் சட்டத் திருத்தம் செய்யும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன் வாயிலாக தன் வாழ்நாள் முழுதும் அதிபர் பதவியில் தொடரும் ஜிங்பிங்கின் முயற்சிக்கு இது முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங், தன் வாழ்நாள் முழுதும் அதிபராக இருந்தார். அதன்பின், இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே அதிபராக தொடரும் நடைமுறை அமலானது. தற்போது அந்த நடைமுறை திருத்தி அமைக்கப்பட்டுஉள்ளது.
கட்சியின் பொதுச் செயலராக நேற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஜிங்பிங் பேசியதாவது:
கடுமையான சூறாவளி, புயல், வெள்ளம் போன்றவற்றைவிட கடுமையான சூழ்நிலையை எதிர்த்து போராடத் தயாராக உள்ளோம்.
நம் நாட்டுக்கு எதிராக, சர்வதேச அளவில் பல சூழ்ச்சிகள், மிரட்டல்கள், நம்மை தடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. நாட்டின் நலனை முக்கியமாக வைத்து நாம் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த, 2012ல் அதிபரான பிறகு, ஊழலை ஒழிக்கும் வகையில், கட்சியில் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவை ஜிங்பிங் அமைத்தார். கடந்த, 10 ஆண்டுகளில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த குழுவுக்கு புதிய உறுப்பினர்களை ஜிங்பிங் நியமித்துள்ளார்.
பெண்கள் கிடையாது!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அமைப்பான அரசியல் குழுவின் ஏழு உறுப்பினர்களையும் ஜிங்பிங் மாற்றியமைத்துள்ளார். இதில், ஒரு பெண்கூட இடம்பெறவில்லை. கடந்த, 25 ஆண்டுகளில் இந்தக் குழுவில் முதல் முறையாக பெண் யாரும் இடம்பெறவில்லை. கடந்த முறை அமைக்கப்பட்ட குழுவில், சுன் சுன்லான் என்ற பெண் மட்டும் இடம்பெற்றிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்