“உச்ச நீதிமன்ற தீர்ப்பு தவறு என்று வாதம் செய்வது அவமதிப்பாகாது” – முன்னாள் நீதிபதி ஏ.கே ராஜன்

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே ராஜனின் “Constitution of India Is Not What Is it “ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. ஏ.கே ராஜன் முன்னாள் நீதிபதி மட்டுமல்லாமல் நீட் தேர்வினால் ஏற்படும் சவால்கள் குறித்து ஆய்வு செய்யும் கமிட்டியின் தலைவரும் ஆவார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜு, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமார், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தியாகராஜன், திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “ஏ.கே ராஜன் எழுதிய இந்த புத்தகம் ஒரு வாரத்துக்கு முன் என் கையில் கிடைத்தது. இந்த புத்தகம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இன்றைய நடைமுறையில் முக்கியமான பொறுப்புகள் எப்படி சரியாகவும் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் பெரிதளவான பொறுப்புகளை நம் நீதித்துறையின் நீதிபதிகள் தோளில் சுமக்க வேண்டி உள்ளது. எத்தனையோ வழக்குகளுக்கு இன்னும் தீர்ப்பு வழங்காமல் நிலுவையில் உள்ளன. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி (JUSTICE DELAYED IS JUSTICE DENIED) என்பதை நாம் யாரும் மறக்க கூடாது. இன்றைய நீதிமன்ற சூழலில் ஒரு வழக்கிலேயே நீதிபதிகளின் தீர்ப்புகள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஏ.கே ராஜன் எழுதிய இந்த புத்தகமானது பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பும்” என்றார்.

உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே ராஜன் பேசுகையில், “சட்ட மேற்படிப்பு படிக்கையில் கே.பி. கிருஷ்ண ஷெட்டி என்னும் ஆசிரியர் ஒரு வழக்கு குறித்து பாடமெடுத்துக்கொண்டிருந்தார். அந்த வழக்கில் மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை என்றால் ஒன்றிய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியென்று புகழ்ந்துகொண்டிருந்தார். நான் அந்த தீர்ப்பு தவறு என்று சொன்னேன். ஆனால் ஆசிரியர் உடனே ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு வாரத்துக்கு பிறகு தான் அவர் நான் சொன்னது தான் சரி என்று என்னிடம் ஒத்துக்கொண்டார்.

ஒரு சட்டக்கல்லூரி மாணவரின் கடமைகளில் முக்கியமானது தீர்ப்புகளை பரிசீலனை செய்வதே. தீர்ப்புகளை ஆராய்வது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு தவறு என்று வாதம் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகாது, அது அடிப்படை உரிமைகளில் ஒன்று. வகுப்பறையில் தான் ஒரு மாணவன் கற்றுக்கொள்ளவும், விவாதிக்கவும் செய்கிறார். கல்லூரிகளில் தான் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் கோச்சிங் வகுப்புகளில் மாணவர் கற்றுக்கொள்ள இயலாது. வகுப்பறையில் ஆராயப்பட்ட தீர்ப்புகளில் உடன்படாத அறச்சீற்றம் தான் இன்று இந்த புத்தகத்தை எழுத வைத்துள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.