ஜூஸ் குடிக்கும்போது நடந்த துயரம்.. சென்னை பத்திரிகையாளர் இறப்புக்கு 5 லட்சம் போதுமா?

தென்காசி மாவட்டம், புளியங்குடியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (24). இவர், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் முத்துக்கிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், வேலை முடிந்து, காசி தியேட்டர் அருகே உள்ள ஜூஸ் கடைக்கு சென்றார். அங்கு, பிள்ளையார் கோயில் முன்பு, மழை நீர் வடிகால் பணிக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

ஜூஸ் வாங்கி குடித்துக்கொண்டே முத்துக்கிருஷ்ணன் அங்கு நடக்கும் போது, மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் அதில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்தார். குழியில் இருந்த கம்பிகள் குத்தி முத்துக்கிருஷ்ணன் படு காயமடைந்து கதறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த தனியார் நிறுவன காவலாளி, முத்துக்கிருஷ்ணனை காப்பாற்றி, அவர் வசிக்கும் கந்தன் சாவடிக்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இதனை அடுத்து தமிழக அரசுக்கு முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு கூடுதல் தொகை வழங்குமாறு டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதுகுறித்து இன்று அவர் போட்டுள்ள ட்வீட்டில், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்துவந்த முத்துக்கிருஷ்ணன், சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, அதன் தொடர்ச்சியாக மரணத்தை தழுவியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

மறைந்த செய்தியாளர் முத்துக்கிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள 5 லட்சம் ரூபாய் நிதி உதவி போதாது. அவரது வயது, குடும்ப சூழல் இவற்றை கருத்தில்கொண்டு, ஒரு தனி நேர்வாக இச்சம்பவத்தைக் கருதி, குறைந்தது ஐம்பது லட்சம் ரூபாயை அந்தக் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.