மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசம் தனிநபருக்கு சொந்தமானது கிடையாது என்றும், இதற்கு முன்பு கட்சியின் பொருளாளர் என்பதற்காகவே ஓபிஎஸ்-க்கு இதில் அதிகாரம் கொடுக்கப்பட்டது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று(அக். 24) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசம் தனிநபருக்குச் சொந்தமானது கிடையாது. இதற்கு முன்புவரை, கட்சியின் பொருளாளர் என்பதற்காக அதில் ஓபிஎஸ்-க்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும், இது ஓபிஎஸ் எனும் தனிநபருடையதோ அல்லது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதோ கிடையாது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அதிமுக நிச்சயம் கட்டுப்படும்.
தேவரின் தங்கக் கவசம் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விதிகளில் என்ன இருக்கிறது என்றால், அதிமுகவின் பொருளாளராக இருப்பவரின் கையெழுத்தைப் பெற வேண்டும் என்றுதான் உள்ளது. எனவே அதன் அடிப்படையில் எங்களிடம் கொடுக்க வேண்டும். அதேநேரம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிக்கும் நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு என்றென்றும் கட்டுப்படுவோம்” என்று அவர் கூறினார்.
பின்னணி: தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்த தங்க கவசம் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியின் போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளையில் அதிமுக, பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரிலான வங்கி கணக்கின் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இந்நிலையில், தங்க கவசத்தை தங்கள் தரப்பிடம் ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.