விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கிருதுமால் நதியில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் தரைப்பாலம் உடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் 10 கி.மீ சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக விருதுநகர் மாவட்டம் வழியாகப் பாயும் கிருதுமால் நதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதிக அளவில் திறக்கப்பட்டதால், நரிக்குடி அருகே வி.கரிசல்குளத்திலிருந்து சிவகங்கை மாவட்ட எல்லையான வயல்சேரி இடையே கிருதுமால் நதியின் குறுக்கே சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் நேற்று இடிந்து விழுந்தது.
இதனால், வி.கரிசல்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அருகே உள்ள திருப்புவனத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தச்சனேந்தல், கல்விமடை, கருவாக்குடி, எஸ்.நாங்கூர் வழியாக மக்கள் சுமார் 10 கி.மீதூரம் சுற்றி திருப்புவனம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை உள்ளிட்ட முக்கியத் தேவைகளுக்காக மக்கள்நூற்றுக்கணக்கானோர் தினமும் திருப்புவனம் சென்று வருகின்றனர். எனவே, தரைப்பாலத்தை சீரமைத்து போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை ஆட்சியர் ஆய்வு: கிருதுமால் நதிப் பாலம் உடைந்து கீழே விழுந்த பகுதியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வுசெய்தார். அப்போது வயல்சேரி மக்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து, ஓரிரு நாட்களில் தற்காலிகமாக கடந்து செல்ல ஏற்பாடு செய்வதாகவும், பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதி அளித்தார்.