சாயல்குடி: தொடர் மழை பெய்து வருவதால் வாரச்சந்தைகளில் தோட்டப்பயிர் விதைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. பயிர்குழி பயிர்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, சிக்கல், கமுதி, அபிராமம், பெருநாழி பகுதியில் நெல் விவசாயமே முதன்மையாக தொழிலாக நடந்து வருகிறது. மிளகாய், சிறுதானியங்கள், நிலக்கடலை, மல்லி, சின்ன வெங்காயம் போன்றவைகளும் சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் தோட்டப்பயிர்களான கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பயறு வகைகள், வெள்ளரி, பீர்க்கங்காய், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய் போன்ற வீட்டு தோட்டப்பயிர்களை வீடு அருகிலுள்ள பகுதிகள், கண்மாய், குளத்து கரைகளில் மழைக்காலத்தில் சாகுபடி செய்வது வழக்கம்.
குறைந்த தண்ணீரில் அதிக லாபம் தரக்கூடிய பயிர்குழி விதைகளை தற்போது வாரச்சந்தைகளில் வாங்கி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை போன்று பஞ்சாயத்துகளில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகளில் மரங்களுக்கு நடுவே தோட்டம் அமைப்பதற்கு பஞ்சாயத்து தலைவர்களும் விதை வாங்கி, பயிர்குழியில் விதைத்து வருகின்றனர். இதுகுறித்து மேலக்கடலாடி விவசாயி பாலமுருகன் கூறுகையில், ‘தற்போது மழை பெய்து வருவதால் தேங்கி கிடக்கும் தண்ணீரை கொண்டு பயிர்குழிகள் அமைத்து வருகிறோம். இதனால் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடியில் நடைபெறும் வாரச்சந்தைகளில் தக்காளி, கத்தரி, முள்ளங்கி, அவரை, சீனிஅவரை, பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணி, பாகற்காய், வெள்ளரி, கீரைகள் உள்ளிட்ட விதைகளை வாங்கி பயிர்குழியில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறோம்.
கண்பார்வையில் படும் தூரத்திற்குள் இருப்பதால் பாதுகாப்புடன் நன்றாக வளரும். இதனை வீட்டு உபயோகத்திற்கு போக மீதம் உள்ளதை வாரச்சந்தைகளிலும், காய்கனி கடைகளிலும் விற்பனை செய்தால் ஓரளவிற்கு வருமானம் கிடைக்கும்’ என்றார். விதை வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘விருதுநகர், மதுரையில் வாங்கி வந்த பயிர்குழி, தோட்டப்பயிர் விதைகளை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உள்ள வாரச்சந்தைகளில் விற்று வருகிறோம். ரூ.5 முதல் ரூ.50 வரை ரகங்களுக்கு ஏற்ப விற்பனை செய்கிறோம். தற்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் மட்டுமின்றி வீடு, மாடி தோட்டங்கள் அமைப்பவர்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்’ என்றார்.