மதுரை: தீபாவளி விடுமுறைக்கு வந்தவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்பி வருவதால் மதுரை ரயில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுக்கு பிறகு இவ்வாண்டு, தீபாவளியை கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டினர். வெளியூர்களில் இருந்தவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இம்முறை தீபாவளி திங்கள் கிழமை அன்று என்பதால் முன்னதாக சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது. குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு ஏராளமானோர் தீபாவளி கொண்டாட வந்தனர். பெரும்பாலும், இவர்கள் சுமார் 2 மாதத்திற்கு முன்பாகவே ரயில்கள், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், தீபாவளி முடிந்து 2 நாள் விடுமுறை முடிந்து மீண்டும் பணி செய்யும் இடங்களுக்கு இன்று காலை முதலே சென்னை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர். இரவுநேர ரயில், பேருந்துகளுக்கு முன்பதிவு செய்தவர்களும், முன்பதிவில்லாமல் பயணிப்பவர்களும் திரண்டதால் மதுரை ரயில் நிலையம், மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வழக்கத்தைவிட, பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களுக்கு சென்ற அனைத்து ரயில்களிலும் நிரம்பி சென்றன. முன்பதிவில்லாத பெட்டிகளிலும் உடைமைகளுடன் பயணிகள் முண்டியடித்தனர். முன்பதிவு நேரத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்பது தெரியாத சூழலில் வேறு வழியின்றி ஏற்கனவே திட்டமிட்டபடி, நேற்று பயணித்ததால் கூட்டம் அதிகமாக இருந்தாகவும், தொடர்ந்து இந்த வார இறுதி வரை ரயில்களில் கூட்டம் இருக்கும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.