கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து, மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாமல் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், அணையிலிருந்து உபரிநீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளுக்கு கடந்த 3 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்ததால், மக்கள் மீண்டும் முகாம்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். வீட்டுக்குச் செல்ல முடியாமல் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள், நிவாரண முகாம்களிலேயே தீபாவளி பண்டிகை நாளை கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் வெளியூர்களில் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இவர்கள் ஊர் திரும்பியுள்ள நிலையில் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வருத்தமடைந்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின்போது இவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முகாம்களில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதேபோல, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கொள்ளிடம் ஆற்றில் வந்து கொண்டிருக்கும் வெள்ளம் கடலில் சென்று கலப்பதில் தாமதம் ஏற்பட்டு, பழையாறு துறைமுகம் அருகேயுள்ள பக்கிங்காம் கால்வாயில் புகுந்து, பழையாறு சுனாமி குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ளது. நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.