புதுடெல்லி: பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை தேசிய பாதுகாப்பு படை வீரர் தடுத்தது சர்ச்சையாகி இருக்கிறது. குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், தற்போது ஆட்சி செய்து வரும் பாஜ, மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி இதற்காக அடிக்கடி குஜராத் சென்று பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மோடியின் காரில் ஏற முயன்ற இம்மாநில முதல்வர் பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர் இவ்வாறு பாதுகாப்பு படை வீரரால் அவமதிக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது. படேல் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
