கன்னோஜ்: உத்தர பிரதேசத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த சிறுமி இரு கைகளை நீட்டி உதவி செய்யும்படி கெஞ்சிய போதும், அவளை காப்பாற்றாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், கன்னோஜ் மாவட்டத்தில் சிறுசேமிப்பு உண்டியல் வாங்குவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையின் அருகே ரத்த காயங்களுடன் அந்த சிறுமி கிடப்பதை பார்த்த காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் அங்கு கூடிய மக்கள், சிறுமியை செல்போனில் வீடியோ எடுத்தனர்.
காயங்களுடன் வலியில் முனகிய சிறுமி, தன்னை காப்பாற்றும்படி அவர்களை நோக்கி இரு கைகளையும் நீட்டி கெஞ்சினாள். ஆனால், இரக்கமற்ற மக்கள் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். காவலாளி கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காவலர் மனோஜ் பாண்டே, சிறுமியை தூக்கி கொண்டு ஓடி ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அரசு விருந்தினர் மாளிகையின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அச்சிறுமி வாலிபர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தது பதிவாகி உள்ளது. இதனால், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிறுமியை காப்பாற்றாமல் வீடியோ எடுத்தவர்களை சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.