குடிகாரன், பொம்பளை பொறுக்கி என கணவனை இழிவுபடுத்துவது மிகவும் கொடுமையானது: மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து

மும்பை: ஆதாரம் இல்லாமல் குடிகாரன், பொம்பளை பொறுக்கி என்று கூறி கணவனை இழிவுபடுத்துவது மிகவும் கொடூரமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புனேயை சேர்ந்த ஒருவர் ராணுவத்தில் மேஜர் பதவி வகித்துவிட்டு ஓய்வு பெற்றவர். இவரது மனைவிக்கு 50 வயது. மனைவி எப்போதும் கணவனை குடிகாரன் என்றும், பொம்பளை பொறுக்கி என்று கூறி இழிவுபடுத்தி வந்தார். மேலும் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் கணவனிடம் இருந்து பிரித்து விட்டார். இதனால், கணவன் விவாகரத்து கோரி புனே குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கினார்.

இதனை எதிர்த்து மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் நிதின் ஜாம்தார் மற்றும் சர்மிளா தேஷ்முக் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, ‘கணவர் குடிகாரன், பொம்பளை பொறுக்கி, உரிய கடமையை செய்வதில்லை’ என்று மனைவி தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால் ,இதற்கான ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘ஆதாரம் இல்லாமல் கணவரை குடிகாரன் என்றும் பொம்பளை பொறுக்கி என்றும் கூறி இழிவுபடுத்துவது மிகவும் கொடுமையானது’ என்று கூறி புனே குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.

* வழக்கின்போதே இறந்த கணவன்
மும்பை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையிட்டு மனுவை தாக்கல் செய்த நிலையில், அதன் மீது விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே கணவர் இறந்து விட்டார். இருப்பினும், வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு, கணவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.