தீபாவளிக்கு மறுநாளான இன்று (25.10.2022) சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவின் சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தொடங்கி 5.42 மணியளவில் முடிவடைகிறது. வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணம் தென்படும்.
இதைத்தொடர்ந்து சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, உள்ளிட்ட நகரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்ககூடாது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, நாடு முழுவதும் கோளரங்குகளில் சூரிய கிரணகத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரணகத்தை முன்னிட்டு தமிழகத்தின் சில முக்கிய கோயில்களில் நடைசாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று காலை 11:00 மணிக்கு நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த பிறகு இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஊத்துக்கோட்டை ஆரணியை அடுத்த சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய் கிழமையான இன்று மிக அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் 2 மணி முதல், இரவு 7:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் என்று, நாளை 26ம் தேதி வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.