நிதியமைச்சரை நீக்குங்கள்: கேரள முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

திருவனந்தபுரம்: பிராந்தியவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசிய நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான்.

நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கடந்த வாரம் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசும்போது, உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு கேரள பல்கலைக்கழகத்தினை புரிந்து கொள்ள இயலாது என்று பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தரத்தில் உயர் கல்வி இருப்பதுபோல் பேசியுள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஆளுநர் தனது கடிதத்தில், “நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலின் பேச்சுகள், அவருக்கு நான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாக அமைந்துள்ளது. உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுபவர்கள் அதனை சிறுமைப்படுத்துபவர்கள் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள் அல்ல.

அக்டோபர் 19 ஆம் தேதி திருவனந்தபுரம் பல்கலைக்கழக வளாகத்தில் பேசுகையில், பிராந்தியவாதத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார். அவர் தேசத்தின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் பேசியிருக்கிறார். மது, லாட்டரி மூலம் வருமானத்தை அதிகரிக்கும் ஓர் அமைச்சர் என்னைப் போன்ற உ.பி. வாசிகளால் கேரள கல்வி முறையை புரிந்து கொள்ள முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் இதேபோன்ற ஒரு கருத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பார்த்து சொல்லாமல் இருப்பாராக.

என் மீது கல்வி அமைச்சர், சட்ட அமைச்சர் என நிறைய பேர் தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்திருந்தாலும், அவை என்னை காயப்படுத்தவில்லை என்பதால் நான் அவற்றை கண்டு கொள்ளவில்லை. ஆனால், இப்போது பாலகோபால் பேசியதை நான் கவனிக்கவில்லை என்றால், அது என் பதவிக்கான பொறுப்பை தட்டிக் கழித்ததாகிவிடும்” என்று அந்தக் கடிதத்தில் ஆளுநர் கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன் நிராகரித்துவிட்டார். இது தொடர்பாக முதல்வரே ஆளுநருக்கு பதில் கடிதமும் எழுதியுள்ளார். இதற்கிடையில் ராஜ்பவனுக்கு வெளியே மாணவ அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.