'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க அனுமதிக்க மாட்டேன்' – மல்லிகார்ஜூன கார்கே உறுதி!

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது. அதனை நடக்க அனுமதிக்க மாட்டேன் என அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுக் கொண்ட பிறகு, மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:

இது உணர்ச்சி மிக்க தருணம். சாதாரண தொண்டரை கட்சி தலைவராக்கிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் . இது கடினமான நேரம் என்பதை அறிவேன். காங்கிரஸ் உருவாக்கிய ஜனநாயகத்தை மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. நாட்டில் நிலவும் வெறுப்பு மற்றும் பொய்கள் நிரம்பிய அமைப்பை காங்கிரஸ் முறியடிக்கும். ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையால், நாட்டில் புது உற்சாகம் எழுந்துள்ளது.

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடந்த சிந்தனையாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்சியின் 50 சதவீத பதவிகள் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். கட்சி ரீதியான பதவிகள் நிரப்பப்படுவதுடன், கட்சியினரின் குறைதீர்க்கும் குழு அமைக்கப்படும். மாநிலங்களில் அரசியல் விவகார குழு ஏற்படுத்தப்படும்.

இளைஞர்கள் வேலையில்லாமல், விவசாயிகள் ஜீப் ஏற்று நசுக்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு விலைவாசியால் மக்கள் அவதிப்படும் போது அரசு கண்களை மூடிக்கொண்டு உள்ளது, பணக்கார தொழிலதிபர்களுக்கு உதவும் அரசு என்ற புதிய இந்தியாவாக நாடு மாறி உள்ளது. இந்த புதிய இந்தியாவில், மக்களின் பசி, கல்விக்கான செலவு, சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது. ஆனால், அரசு தூங்குகிறது. அதேநேரத்தில் சிபிஐ, அமலாக்கத் துறை 24 மணிநேரமும் பணியாற்றுகிறது.

புதிய இந்தியாவில், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் நசுக்கப்படுகின்றனர். அவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை அகற்ற முயற்சி நடக்கிறது. இது போன்ற புதிய இந்தியாவை உருவாக்க காங்கிரஸ் இல்லாத நாட்டை விரும்புகின்றனர். ஆனால், அதனை நடக்க அனுமதிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.