வண்டலூர் அருகே இன்று காலை 6 அடி நீள முதலை சிக்கியது: வனத்துறையிடம் ஒப்படைப்பு

கூடுவாஞ்சேரி: வண்டலூர்அருகே இன்று காலை குடியிருப்பு பகுதியில் புகுந்த 6 அடி நீளமுள்ள முதலையை பொதுமக்கள்  பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம் பந்தலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், மப்பேடுபுத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு கருமாரி அம்மன் கோயில் தெருவில் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 6 அடி நீளமுள்ள முதலை ஊர்ந்து வந்தது.

இதை பார்த்ததும் மக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஊராட்சி தலைவர் வனிதா, 10வது வார்டு உறுப்பினர் சிவசுப்பிரமணியம் ஆகியோர்  சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் 6 அடி முதலையை லாவகமாக பிடித்து கயிறுபோட்டு கட்டினர்.  அதன்பிறகு வேளச்சேரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு வந்த வனத்துறையினரிடம் முதலையை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘‘வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள கொளப்பாக்கம் மற்றும் நெடுங்குன்றம் ஏரியில் ஏற்கனவே பல முதலைகள் பிடிபட்டுள்ளது. இந்த நிலையில், கொளப்பாக்கம் பெரிய ஏரியில் சவுடு மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அங்கிருந்து முதலை வந்திருக்கலாம். முதலை ஊருக்குள் வந்ததால்  அச்சத்தில்  உறைந்தோம். இனி இதுபோன்று முதலைகள் குடியிருப்புக்குள் வராதவாறு வனத்துறை உயரதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்”  என்றனர். சமூக ஆர்வலர்களும்  கோரிக்கை வைத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில்  முதலை புகுந்த  சம்பவம் நெடுங்குன்றம் ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.