விளையாட்டாக இலவச பேருந்தில் ஏறி வழியை மறந்து போன சிறுமிகள்!! இறுதியில் நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் மாயமான 2 சிறுமிகள் விளையாட்டாக இலவச பேருந்தில் ஏறி திரும்ப சொந்த ஊர் வர தெரியாமல் பேருந்திலேயே சுற்றிவந்த நிலையில் தக்கலை போலீசார் அவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி கருக்கி பகுதியைச் சேர்ந்தவர் தம்பி ராஜ். இவரது மகள் 14 வயதான ஆஸ்லின் ராஜிசாவும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெபசிங் என்பவரின் மகள் 11 வயதான ஜெஸ்வினி என்ற இரு சிறுமிகளும் செவ்வாய்கிழமை மாலை அருகில் உள்ள கடைக்குச் சென்று வருவதாகக்கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளனர். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் சிறுமிகள் குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
image
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் சிறுமிகளை யாரேனும் கடத்திச் சென்றார்களா என்ற கோணத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் இரு சிறுமிகள் மட்டும் நடந்துசெல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மிடாலம் பகுதியில் இரண்டு சிறுமிகள் ஊருக்குச்செல்ல வழி தெரியாமல் நிற்பதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
image
இதனையடுத்து அங்கு சென்ற கருங்கல் போலீசார் அந்த சிறுமிகளை மீட்டு விசாரித்ததில் அவர்கள் பள்ளியாடி கருக்கி பகுதியைச் சேர்ந்த ஆஸ்லின் ராஜிசா மற்றும் ஜெஸ்வினி என்பதும், வீட்டில் இருந்து கடைக்கு வந்த அந்த சிறுமிகள் விளையாட்டாக இலவச அரசு பேருந்தில் ஏறி நாகர்கோவில் சென்றதும், பின்னர் சொந்த ஊருக்கு செல்லும் பேருந்து எது என்று தெரியாமல் மிடாலம் பேருந்தில் ஏறி வந்ததாகவும் கூறினர்.
இதனையடுத்து சிறுமிகள் குறித்த விவரத்தை கருங்கல் போலீசார் தக்கலை போலீசாரிடம் தெரிவித்த நிலையில், தக்கலை போலீசார் சிறுமிகளை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.