மும்பை மும்பையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, தரக்குறைவான வார்த்தைகளால் அழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் சாக்கினாகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த அப்ரார் நுார் முகமது கான் என்ற நபர், நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
பள்ளிக்கு சென்று திரும்பும் வழியில், சாலையில் வைத்து அந்த சிறுமியை தரக்குறைவாக கிண்டல் செய்து வந்தார்.
கடந்த 2015, ஜூலை 14ல், அந்த சிறுமி பள்ளியில் இருந்து திரும்பும் போது, நண்பர்களுடன் சாலையில் அமர்ந்திருந்த அப்ரார், சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்து துன்புறுத்தினார்.
‘ஏய் அயிட்டம், எங்கு சென்றுவிட்டு வருகிறாய்?’ என, அந்த சிறுமியிடம் கேட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு விசாரணை, மும்பையின் போரிவாலி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி அன்சாரி கடந்த 20ல் தீர்ப்பளித்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
பெண்களை பாலியல் ரீதியாக தரக்குறைவாக சித்தரிக்க, ‘அயிட்டம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது. பெண்களை அப்படி அழைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் செயல்.
பெண்களை இதுபோல அழைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்த சமூகத்துக்கு உணர்த்த வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு உள்ளது.
எனவே, குற்றவாளி அப்ரார் நுார் முகமது கானுக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்