அபராத கட்டண உயர்வை கைவிடுக! – தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும் என, தமிழக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதத் தொகையை, அண்மையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உயர்த்தியது. இந்த அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது, பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும் என, தமிழக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் அபராதமாக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை 400 % முதல் 1900 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு ரூ. 100 என இருந்தது ரூ. 1000‌‌ எனவும், காரில் சீட்பெல்ட் அணியாமல் செல்வோருக்கு 100 ரூபாயிலிருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தகைய அறிவிப்பானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்து விட முடியாது. போக்குவரத்து சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை விரிவாக மேற்கொள்வதுடன், கூடுதலான தன்னார்வலர்களை இப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டுமெனவும், அதேபோல தேவையான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விபத்து – உயிரிழப்பு விகிதங்களை குறைக்க‌வும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

எனவே, மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள அபராத கட்டண விகிதங்களை முழுமையாக கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.