திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துப் பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் வாத்துகளுக்கு அடிக்கடி பறவைக் காய்ச்சல் நோய் பரவுகிறது. இது மனிதர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக இங்குள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் வாத்துகள், பறவைகள் கொல்லப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் செத்தன. இந்த தகவல் அறிந்ததும் கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் வாத்துகளின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக பூனாவில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரிசோதனையில் வாத்துகளுக்கு எச் 5 என் 1 வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா தலைமையில் கால்நடை பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஹரிப்பாடு வழுதானம் பகுதியில் உள்ள 20,471 வாத்துகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டது. இன்று முதல் வாத்துகளை கொல்லும் பணிகளை தொடங்கவும், வழுதானம் பகுதியில் 1 கிமீ சுற்றளவில் அனைத்து பறவைகளை கொல்லவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வழுதானம் பகுதியில் வாத்துகள் உட்பட பறவைகளை கொண்டு வருவதற்கும், அங்கிருந்து வெளியூர்களுக்கு பறவைகளை கொண்டு செல்வதற்கும் தடைவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.