‘உலகின் துயர்மிகு கொரில்லா’ என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் உள்ள புவா நொய் கொரில்லாவை குகையிலிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தில் விலங்கியல் ஆர்வலர்கள் இறங்கி உள்ளனர்.
புவா நொய் என்ற கொரில்லா 1990-ஆம் ஆண்டு தாய்லாந்து வந்துள்ளது. இந்த கொரில்லா தாய்லாந்தில் உள்ள தனியார் விலங்கியல் பூங்காவில் சுமார் 32 ஆண்டுகளாக தனிமையில் இருந்து வருகின்றது. இந்த நிலையில், தனிமையில் உள்ள கொரில்லாவை மீட்க 2015-ஆம் ஆண்டு முதல் விலங்கியல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். பாப் பாடகர்களும் தனிமையில் இருக்கும் கொரில்லாவை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் வெளிச்சம் பெற்றது.
புவா நொய் கொரில்லா தனது இறுதி காலங்களில் சுதந்திரமாக இருக்க வேண்டும். அது பிற கொரில்லாகளுடன் அமைதியாக தனது பொழுதை கழிக்க வேண்டும் என விலங்கியல் ஆர்வலர்கள், பூங்காவின் உரிமையாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில், இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் வரை கொடுத்தால்தான் கொரில்லாவை விடுவிக்க முடியுமென அதன் உரிமையாளர் கூறிவிட, தற்போது அந்த தொகையை திரட்டும் பணியில் விலங்கியல் ஆர்வலர்களும், தாய்லாந்து அரசும் இறங்கியுள்ளன.
இதுகுறித்து தாய்லாந்து அரசு தரப்பில், “புவா நொய் கொரில்லாவை விடுவிக்க கடந்த வாரம் நாங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டினோம். இதில் பிரச்சினை என்னவென்றால் நாங்கள் திரட்டிய தொகை உரிமையாளர்களுக்கு போதுமானதாக இல்லை. உரிமையாளர் அதிக தொகையை எதிர்பார்க்கிறார்” என்றனர்.
இதற்கிடையே, எப்படியாவது புவா நொய் கொரில்லாவை மீட்டுவிட வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.