ஜிம்பாப்வே vs பாகிஸ்தான் கிரிக்கெட்; மிஸ்டர்.பீனால் எழுந்த பரபர சர்ச்சை – என்னதான் பிரச்னை?

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான சூப்பர் 12 சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே நாட்டு ரசிகர்கள் இதை மிகப்பெரிய அளவில் கொண்டாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில ஜிம்பாப்வே ரசிகர்கள் பிரபல நகைச்சுவை நடிகரான மிஸ்டர்.பீன் புகைப்படத்தைப் பதிவிட்டுப் பாகிஸ்தானைக் கேலி செய்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகியதை அடுத்து சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் இதைப் பகிர்ந்து வைரல் செய்து வருகின்றனர்.

இதற்கான காரணம் என்ன தெரியுமா?

இதற்குக் காரணம் 2016ம் ஆண்டு நடந்த நிகழ்வுதான். அப்போது ஜிம்பாப்வேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு ‘மிஸ்டர்.பீன்’ கதாபாத்திரத்தில் நடித்த ரோவன் அட்கின்சனைச் சிறப்பு விருந்தினராக அழைக்கத் திட்டமிருந்தனர். ஆனால் மிஸ்டர்.பீன் போல வேடமணிந்த நபர் ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை அறியாமல் பலரும் மிஸ்டர்.பீன்தான் வந்திருக்கிறார் என நினைத்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அந்த நபரும் உண்மையைச் சொல்லாமல் அனைவருடனும் போட்டோ எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் அந்த நபர் பாகிஸ்தானைச் சேர்ந்த காமெடியன் ஆசிப் முகமது என்று தெரியவந்துள்ளது.

மிஸ்டர் பீன் போல வேடமணிந்து வந்த ஆசிஃப் முகமது

ஆறு வருடங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, ‘தற்போது பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே பெற்ற இந்த வெற்றி, போலியான மிஸ்டர்.பீனை அழைத்து வந்து ரசிகர்களை ஏமாற்றியதற்கான ரிவெஞ்ச்’ என்று ஜிம்பாப்வே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாகிஸ்தான் அணியைக் கேலி செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியதை அடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மாறி மாறி பதிவிட்டு சண்டை போட்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த அடீல் கான் (Adeel Khaan) என்பவர் பாகிஸ்தான் மிஸ்டர்.பீனின் அதிகாரபூர்வ பதில் என்பதாக ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில் தான் ஜிம்பாப்வே நாட்டை மிகவும் நேசிப்பதாக பாகிஸ்தான் மிஸ்டர் பீன் பேசுவது போல வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவும் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல, ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றவுடன், அந்த நாட்டின் அதிபர், பாகிஸ்தானைக் குறிப்பிட்டு, இந்த முறையேனும் நிஜமான மிஸ்டர்.பீனை அனுப்புங்கள் என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானின் பிரதமர், “எங்களிடம் நிஜமான மிஸ்டர்.பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையான கிரிக்கெட் உணர்வு இருக்கிறது. அதேபோல், திரும்ப கம்பேக் கொடுக்கும் விளையாட்டான பழக்கமும் எங்களுக்கு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். கூடவே, ஜிம்பாப்வே வெற்றி பெற்றதற்காக தன் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.