காந்தாராவிலிருந்து வராஹ ரூபம் பாடலை பயன்படுத்த தடை

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இந்தப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது. உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு தங்களது பாராட்டுக்களையும் இந்த படம் குறித்த பிரமிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் திருஷ்டி பொட்டு வைத்தது போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் என்கிற பாடல் தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற மலையாள இசைக்குழுவினர் உருவாக்கிய நவரசம் என்கிற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்கிற சர்ச்சை கிளம்பியது.

காந்தாரா படத்திற்கு இசை அமைத்த அஜனீஷ் லோக்நாத் இதை மறுத்து இருந்தாலும் தாய்க்குடம் பிரிட்ஜ் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறியிருந்தது. சொன்னதுபோலவே கோழிக்கோடு செஷன்ஸ் கோர்ட்டில் காந்தாரா படத்தில் இருந்து வராஹ ரூபம் பாடலை நீக்க வேண்டுமென வழக்கும் தொடுத்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வராஹ ரூபம் பாடலை காந்தாரா படத்திலிருந்து, தியேட்டர்களிலோ வேறு எந்தவிதமான வெளியீட்டு தளங்களிலோ பயன்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.