புதிய ‘டிரினிக் மால்வேர்’ மூலம் மோசடி; ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தினால் உஷார்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ‘சிரில்’ எச்சரிக்கை

புதுடெல்லி: கம்ப்யூட்டர்கள் அல்லது மொபைல் போன்களின் செயல்பாட்டை கெடுக்க, தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுவது என்பது உட்பட பல்வேறு சட்டவிரோத நோக்கங்களுக்காக பல்வேறு மால்வேர்களை (வைரஸ்) ஹேக்கர்கள் உருவாக்குகின்றனர். இதுகுறித்து சைபர் ஆராய்ச்சி மற்றும் புலனாய்வு ஆய்வகம் (சிரில்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் போல் செயல்படும் புதிய டிரினிக் ஆண்ட்ராய்டு டிரோஜன் என்ற மால்வேர் 18 வங்கிகளைக் குறி வைத்து ஊடுருவி வருகிறது. வருமான வரி செலுத்துவோர், அதை திரும்பப் பெறுவதற்கான செயலி என்று கூறி மோசடி நடக்கிறது.

இதுபோன்ற மால்வேர் 2016-ம் ஆண்டு முளைத்தது. தற்போது அதன் புதிய வடிவம் வந்துள்ளது. கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த மால்வேர் தீவிரமாக செயல்படுவது தெரியவந்தது. உடனடியாக புதிய மால்வேர் குறித்து 27 வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரிக்கை வெளியிட்டது.

அதன்பின், போலி மொபைல் ஆப், போலி இ மெயில்கள், எஸ்எம்எஸ்.கள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களிடம் மோசடி நடத்த முயற்சிகள் நடந்தன. தற்போது டிரினிக் என்ற பெயரில் ‘ஏபிகே பைல்’ என்ற ஆவணத்தை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகிறது.

அதில் ‘ஐஅசிஸ்ட்’ என்ற அப்ளிகேஷன் உள்ளது. அது வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ பக்கம் போலவே உள்ளது. ஆண்ட்ராய்டு போனில் ஐஅசிஸ்ட்டை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய சொல்லும்.

கடைசியில் உண்மையான வருமான வரித் துறை பக்கம் திறக்கும். அதை வாடிக்கையாளர்கள் திறந்து தங்களுடைய பான் எண், ஆதார் எண் உட்பட அனைத்துத் தகவல்களையும் அளித்த பின்னர், ‘வருமான வரியில் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை உடனடியாக உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்த ‘கிளிக்’ செய்யவும் என்று தெரிவிக்கப்படும். அதை நீங்கள் கிளிக் செய்தால், மோசடிக்காரர்கள் உங்கள் தகவல்களை திருடி விடுவார்கள்.

அதன் பின்னர் உங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எளிதாக திருடி விடுவார்கள். எனவே, உங்கள் போன்களுக்கு அதிகாரப்பூர்வ அல்லது புதிய லிங்க் எது வந்தாலும், அதை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

இவ்வாறு சிரில் எச்சரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.