அந்தியூர்:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியம், அந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் இருந்து எலச்சிபாளையம் வரை, 18 கி.மீ., தூரம் நடந்து வந்து மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். உடன், அந்தியூர் எம்.எல்.ஏ.,வெங்கடாச்சலம், மாவட்ட கலெக்டர், கிருஷ்ணண்ணுன்ணி உடனிருந்தனர்.
அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி, தாமரைக்கரையில் இருந்து எலச்சிபாளையம் வரை 18 கி.மீ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.
இந்த நடைபயிற்சியில் ஈரெட்டி, கடையஈரெட்டி, எலச்சிபாளையம் காலனி வழியாக சென்றபொழுது சினேகா மற்றும் அபிதா ஆகிய இரு பெண்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் அங்குள்ள நோயாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 3 நோயாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய பெட்டகத்தினை வழங்கினார். அதனை தொடர்ந்து தாமரைக்கரையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், கலெக்டர், கிருஷ்ணனுண்ணி தமையில், எம்.பி., செல்வராஜ், மற்றும் அந்தியூர் எம்.எல்.ஏ.,வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், முத்துசாமி அவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
இதில், பர்கூர் மலைப்பகுதியில் புதிய நடமாடும் மருத்துவக்குழு சேவைகளில், புதிய 108 ஆம்புலன்ஸ், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு, புதிய தாய் சேய் நல ஊர்தி சேவை மற்றும் புதிய அமரர் ஊர்தி சேவை ஆகியவற்றினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்கள்.
இதில் அமைச்சர், மா.சுப்பிரமணியன் பேசிய போது, தமிழகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தை வழங்கிய முன்னாள் முதல்வர் மாண்புமிகு டாக்டர். கலைஞர் அவர்தம் வழிவந்த மக்களைத் தேடி மருத்துவம் வழங்கிய முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்றைய தினம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில்,அந்தியூர்சுற்றுவட்டார மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் தாமரைக்கரை பகுதியில் புதிய 108 ஆம்புலன்ஸ், பர்கூர் மலைப்பகுதியில் மக்களுக்கு புதிய நடமாடும் மருத்துவக்குழு வாகனம், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவித்த தாய்மார்கள் வீடுவரை கொண்டு சென்று விட புதிய இலவச தாய்சேய் நல ஊர்தி 102 வாகனம், அந்தியூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய இலவச அமரர் ஊர்தியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவ கட்டமைப்புடன் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுமார் அனைத்து மருத்துவ வசதியுடன் 389 எண்ணிக்கையில், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் சேவையினை துவங்கி வைத்தார். அந்த வகையில் இன்றைய தினம் தாமரைக்கரை பகுதியில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய 108 அவசர ஊர்தி சேவை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இன்று வரை, சுமார் 94 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர். விரைவில் 1 கோடி என்ற மகத்தான சாதனையை புரியவுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில்,மலை கிராமங்களில் காணொளி வாயிலாக நோய் கண்டறிந்து அதற்கான மருந்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்காணும் இச்சிகிச்சை ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டதற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 26.79 கோடி மதிப்பீட்டில் 19 அறிவிப்புகளின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் நவீன உபகரணங்கள், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் 20 இலட்சம் மதிப்பீட்டில் பச்சிளங்குழந்தைகளின் செவித்திறன் கண்டறிவதற்காக, ஒலி புகா அறை மற்றும் நவீன உபகரணங்கள். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 2.10 கோடி மதிப்பீட்டில் புதிய சி.டி ஸ்கேன் கருவிகள், பவானி அரசு மருத்துவமனையில் 34.5 இலட்சம் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கு நவீன உபகரணங்கள் ஈரோடு மாவட்டத்தில் 5.26 இலட்சம் மதிப்பீட்டில் விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில் விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவேற்றல் செய்ய புதிய மென்பொருள்,4.85 கோடி மதிப்பீட்டில் மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, சிறுவளுர், சித்தோடு, உக்கரம், திங்களுர் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடங்கள், 1.30 கோடி – 4 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள், மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.77 கோடி மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள், சிவகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிடம், 99.40 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார ஆய்வக கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளது.
திண்டல்,வீரப்பன்சத்திரம் ஆகிய இரண்டு ஈரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 48 லட்சம் மதிப்பீட்டில் கலர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருவிகள், 2 கோடி மதிப்பீட்டில், 143 கிராம துணை சுகாதார நிலையங்களை நல்வாழ்வு மையங்களாக மாற்றுதல். 8.5 இலட்சம் மதிப்பீட்டில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பி.பி., அக்ரஹாரம் நேதாஜி சாலை, காந்திஜி ரோடு ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு எலக்ட்ரோ கார்டியோகிராபி மற்றும் ரத்த சேமிப்பு கிடங்கு உபகரணங்கள் 5 லட்சம் மதிப்பீட்டில் திண்டல் ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தினை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தல் உள்ளிட்டவைகளை பற்றி அறிவித்தார். இதனையடுத்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்த, அமைச்சர்கள், மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்