“கோவை சம்பவத்தில் அண்ணாமலையை கூப்பிட்டு என்.ஐ.ஏ. விசாரிக்கட்டும்”- எம்.பி. கனிமொழி பேச்சு

“இந்தியா என்பது மக்களால் உருவாக்கப்பட்டது. எல்லா மதம், எல்லா மொழிகளை சார்ந்தவர்கள் தான் இந்தியா. இதனை சிதைக்க வேண்டும் என நினைப்பது மிகப்பெரிய தவறு” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் “நவீனக் கல்வி கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன?” என்ற நூலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநிதி வெளியிட, அதன் முதல் பிரதியை மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய எம்.பி கனிமொழி, “புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு ஒரு சிலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பொய்யான உரைகளை பரப்பி வருகின்றனர். இங்கே உயர்பதவியில் இருப்பவர்கள் கூட சில முக்கியமான கருத்தை சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, `எந்த நாடும் ஒரு மதத்தையும் சாராமல் இருக்க முடியாது’ என எதற்காக சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. எத்தனை நாடுகள் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியுமா? உலகில் நிறைய நாடுகள் மதசார்பற்ற நாடுகளாக தான் உள்ளது.
image

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது என்று மெக்காலே கூறியதால், இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர் கருத்தை இவர்கள் ஏற்பதில்லை. ஒரு காலத்தில் கிளர்க் வேலை கூட கிடைக்க, நமக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஏனெனில் அதற்கு கூட அவர்கள் தான் போய் கொண்டு இருந்தார்கள். `நான் உட்கார்ந்து இருக்கிற இடத்தின் பக்கத்தில் நீ வந்து உட்காருகிறாய் அல்லவா? அந்த இடத்திற்கு உன்னை கொண்டு வந்த கல்விக் கொள்கையை நாங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்பதுதான் இவர்கள் அவரின் மீது தொடர்ந்து வைக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இதை உடைக்க வேண்டும். அதற்காக இப்புத்தகத்தை 20,000 – 30,000 புத்தகங்கள் படித்து உள்ளவர்களுக்கு கூட (பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்ததாக சொல்லப்படுகிறது) இந்த புத்தகத்தை அனுப்பி வைக்கலாம்.

 image
நாம் எதை அடித்து மேலே வந்தோமோ, அதே பழைய இடத்துக்கு நம்மை கொண்டு செல்ல தான் இவர்கள் புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகின்றனர். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் அறிவியல் குறித்து எத்தனை புத்தகங்கள் உள்ளது? இது எல்லாம் இவர்களுக்கு கிடைக்க கூடாது என்று நினைத்ததை, திராவிட இயக்கம் உடைத்து கொண்டு வந்து மக்களுக்கு சேர்த்துள்ளது. நமது கல்வி கொள்கையில், எந்த ஒரு மாணவனுக்கும் கல்வி தர வேண்டும் என்பதே உள்ளது. சரித்திரத்தை மாற்றி அதையே பாட புத்தகத்தில் எழுதி வருகிறார்கள். அதற்கு இந்த புத்தகம் என்பது நமக்கு ஆயுதமாக இருக்கும்” என கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசுகையில், “மெக்காலே கல்விக் கொள்கையை பற்றி தொடர்ந்து பொய் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்தி திணிப்பு, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயமாக எதிராக போகக்கூடிய ஒன்று. மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் அவர்கள், இதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவிஷயம் திணிக்கப்படும் பொழுது, கண்டிப்பாக அதற்கு எதிர்வினை உண்டு” என்றார்.

image
தொடர்ந்து பேசுகையில், பாரதம் என்பது ரிஷிகளாலும், சனாதான தர்மத்தினாலும் உருவாக்கப்பட்டது என்ற ஆளுநரின் கேள்விக்கு பதிலளித்தவர். அந்த பதில், – “இந்தியா என்பது மக்களால் உருவாக்கப்பட்டது எல்லா மதங்களைச் சேர்ந்தவர்கள் மொழிகளை சார்ந்தவர்கள் பல நம்பிக்கைகளால் சேர்ந்தது தான் இந்தியா. இதை சிதைக்க வேண்டும் என நினைப்பது மிகப்பெரிய தவறு. கோவை சம்பவத்தில் என்.ஐ. ஏ. அண்ணாமலையை கூப்பிட்டு விசாரிக்கட்டும். அதற்கு அவர் பதில் சொல்லட்டும்” எனக் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.