சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 15 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை பெரம்பூர், ஆவடியில் தலா 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நவ. 2-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, 15 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெரம்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆகிய இடங்களில் தலா 17 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தலா 16 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், கும்மிடிப்பூண்டியில் தலா 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நவ. 3, 4, 5, 6-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 3-ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 4-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நவ. 5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 6-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.