சென்னை: நிலத்தில் இருந்து அருகில் உள்ள சேகரிப்பு மையத்துக்கு விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கான புதிய இயந்திரத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொது விவசாயிகள் சங்கம் என்னும் அரசுசாரா நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, விவசாய நிலத்தில்இருந்து விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கான இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.
பொது விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டி.என்.சிவசுப்பிரமணியனின் நிலம் கரூர் மாவட்டம் நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் புதிதாக ஒரு இயந்திரத்தை வடிவமைத்து, அதை சோதனை செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.
இதுகுறித்து இயந்திரத்தை உருவாக்கிய பேராசிரியர் ஷங்கர் கிருஷ்ணபிள்ளை கூறும்போது, “வரும் காலங்களில் அறுவடைக்குப் பிந்தைய பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளர்கள் கிடைக்காத சூழல் உருவாகும். இதைப்போக்கவே இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இருபுறமும் கம்பி வைத்து நிலம் வாயிலாக செல்லும் இந்த இயந்திரம் மூலம் விளைபொருட்களை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். எளிதாக கிடைக்கும் ஸ்டீல் பொருட்களைக் கொண்டு குறைவான எடையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுகுறித்து டி.என்.சிவ சுப்பிரமணியன் கூறும்போது, “குறிப்பாக ஈர நிலத்தினுள் இறங்காமல் விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்பதால் விவசாயிகளுக்கு இது மிகுந்த பயன் தரும்’’ என்றார்.