சென்னை: தமிழகத்தில் 55 சதவீதம் அதாவது 3.43 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, இரட்டை பதிவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கும்வகையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இப் பணிகள் தொடங்கின.
வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ஆதார் விவரங்களைப் பெற்று, ‘கருடா’ செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இதுதவிர, இணையதளம் வாயிலாக வாக்காளர்களே தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். இவ்வாறு அனைத்து வாக்காளர்களின் விவரங்களையும் பெற்ற பின், இணைப்பு பணிகள் தொடங்கும். இப்பணிகள் 2023 மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தன்னார்வமாக பொதுமக்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விவரங்களை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்களில் 3.43 கோடி வாக்காளர்கள் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். இது 55.37 சதவீதமாகும். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி, அரியலூர், தருமபுரி மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக சென்னையில் 20 சதவீதம் பேரே ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். 21 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் ஆதார் விவரங்கள் பெறப் பட்டுள்ளன.
நவ.9-ம் தேதி வரைவு வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்குகின்றன. 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.