சென்னை அருகில் உள்ள சிட்லபாக்கம் திருமலை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் இருவருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நேற்று மாலை இந்த சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

இந்த சம்பவத்தைப் பார்த்த அந்த பகுதி மக்கள் தகவலைக் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை வினோத், இதுகுறித்து சிட்லபாக்கம் பகுதி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பெயரில், உடனடியாக அந்த பகுதியில் பணியிலிருந்த போலீஸாருக்குச் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரையடுத்து, தாம்பரம் சென்னை பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் சிறுமியைத் தீவிரமாகத் தேடிவந்தனர். அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில், ஆட்டோவில் கடத்திச்சென்ற நபர் சிக்கியுள்ளார்.
இந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு ஆட்டோவைத் தேடும் பணி தொடங்கியது. ரோந்து பணியிலிருந்த குரோம்பேட்டை பகுதி போலீஸார், அந்த வழியாக வந்த ஆட்டோவைச் சோதனை செய்தனர். குரோம்பேட்டை எம்ஐடி பகுதியில் வாகன சோதனை ஈடுபடக் காவலர்கள் கடத்தல் ஆட்டோவை அடையாளம் கண்டு மடக்கிப் பிடித்தனர். ஆட்டோவிலிருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்டு அவரின் பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமியைக் கடத்தியவரைக் கைது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், குற்றத்தில் ஈடுபட நபர், குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் (34) என்பதும், இவர் சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், குழந்தையைக் கடத்தியதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும், இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீஸார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர். ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமியை அடுத்த ஒரு மணிநேரத்தில் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்குப் பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். மேலும், தெருவில் விளையாடிய குழந்தை கட்டத்தப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.