புதுடெல்லி: ‘தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது. காற்றில் விஷத்தன்மை அதிகரித்துள்ளதால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதே நிலை நீடித்தால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்’ என்று மாநில அரசுக்கு குழந்தைகள் உரிமை தேசிய பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு கவலை தருவதாக இருக்கிறது.
நேற்று டெல்லியில் காற்று மாசு அளவீடு செய்யப்பட்டதில், ‘மிகவும் மோசம்’ என பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும், ‘காற்றில் விஷத்தன்மையுள்ள மாசு உள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என டாக்டர்கள், நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் நேற்று விடுத்துள்ள செய்தியில், ‘காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வீடுகளில் இருந்து வேலை செய்ய ஊழியர்களுக்கு தேவையானவற்றை செய்து தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
குழந்தைகள் உரிமை தேசிய பாதுகாப்பு ஆணையம் நேற்று டெல்லி மாநில அரசின் தலைமை செயலாளருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு தவறி விட்டது.
காற்றில் விஷத்தன்மை உள்ளதால் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். உயிர்களை இழக்கும் நிலை கூட ஏற்படலாம். எனவே இதில் அலட்சியமாக இருக்க முடியாது. டெல்லி அரசின் அலட்சியப் போக்கு நீடித்தால் பள்ளிகளை மூட உத்தரவிட நேரிடும்’ என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ‘பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை டெல்லி அரசு உறுதி செய்ய வேண்டும். மாணவ, மாணவிகள் பள்ளி மைதானங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் விளையாடுவதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக 24 மணி நேரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமை தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விவசாய கழிவுகளை எரிப்பதும் காரணம்
பஞ்சாபில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாய கழிவுகளை தீயிட்டு அழிக்கின்றனர். டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது உறுதியாகியுள்ளது. ஹரியானாவிலும் விவசாய நிலங்களில் அறுவடை முடிந்த பின்னர், விவசாயிகள் தீ வைக்கின்றனர். இது தொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘விவசாய கழிவுகளை அப்புறப்படுத்த எங்களுக்கு வேறு வழிகளே இல்லை. மாற்று வழிகளை ஏற்படுத்தி தர வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை. ஒன்றிய, மாநில அரசுகளின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளனர்.