கம்மம் தெலுங்கானாவில், மதுவுக்கு அடிமையான மகனின் சித்திரவதையை தாங்க முடியாத பெற்றோர், கூலிப்படையை வைத்து அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, ஹுசூர் நகர் போலீஸ் ஸ்டேசன் அதிகாரி ராமலிங்கா ரெட்டி தெரிவித்ததாவது:
இங்கு, கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராம்சிங் – ராணிபாய் தம்பதி. இவர்களது மகன் சாய்ராம், ௨௬, மதுவுக்கு அடிமையாகி, பெற்றோரை துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால், துயரம் அடைந்த பெற்றோர், மகனை கொல்ல திட்டமிட்டனர். இதற்காக ராணிபாயின் சகோதரரான சத்யநாராயணாவிடம் உதவி கோரினர்.
அவரும், சொந்த மருமகனை தீர்த்துக் கட்ட கூலிப்படையை ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு முன்பணமாக ௧.௫ லட்சம் ரூபாயும் வேலை முடிந்ததும், மீதி ௬.௫ லட்சம் ரூபாய் தருவதாகவும் முடிவு செய்தனர்.
இதையடுத்து, சத்யநாராயணா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ரவி இருவரும், சாய்ராமை காரில் ஏற்றி, கள்ளேபள்ளி கோவிலுக்குச் சென்றுள்ளனர். வழியில், மற்றொருவரும் ஏறிக்கொண்டார்.இவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, சாய்ராமின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின் அவரது உடலை சூரியபேட்டை பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். தகவலறிந்து, அங்கு சென்ற போலீசார், சாய்ராமின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன.இதையடுத்து சாய்ராமின் பெற்றோர் மற்றும் குற்றவாளிகள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement