வெளிநாடு செல்லும் புதுச்சேரி எம்எல்ஏக்களின் தொகுதிகளை அரசு துறையினர் கவனிப்பர்: ரங்கசாமி விளக்கம்

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் பிரான்ஸ், இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்கின்றனர். சுற்றுலா வளர்ச்சிக்காக என குறிப்பிடுகின்றனர். பருவமழை அதிகரித்துள்ள சூழலில் வெளிநாடு செல்வோர் தொகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் அரசு துறையினர் கவனிப்பார்கள் என்று முதல்வர் ரங்கசாமி விளக்கம் தந்தார்.

புதுச்சேரி புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது இதில் பாஜக எம்எல்ஏக்களுக்கு வாரிய தலைவர் பதவியை முதல்வர் ரங்கசாமி தரவில்லை என்று அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டி வருகின்றனர்‌. சட்டப்பேரவையிலும் ரங்கசாமி மீது பாஜகவினர் குற்றச்சாட்டி இருந்தனர். ஒரு கட்டத்தில் பேரவை வளாகத்திலும் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநாடு சென்றிருந்தனர்.

இந்நிலையில், புதுவையில் ஆளும் கட்சியான என்ஆர்.காங்கிரஸ் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்று பயணம் செல்கின்றனர். அதன்படி 4ம் தேதி அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், தட்சிணாமூர்த்தி பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகிய நான்கு எம்எல்ஏக்களும் பிரான்ஸ் புறப்பட்டு செல்கின்றனர். அதேபோல் அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, ஆதரவு சுயேட்சைகள் நேரு, பிரகாஷ் குமார் ஆகியோர் வரும் ஆறாம் தேதி லண்டன் புறப்பட்டு செல்கின்றனர்.

இந்தச் சுற்றுப்பயணத்தை முடித்து. வரும் 16ம் தேதி மீண்டும் அவர்கள் புதுவை திரும்புகின்றனர். இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, புதுவை சுற்றுலா வளர்ச்சிக்காக எம்எல்ஏக்கள் சுற்றுப்பயணம் செல்வதாகக் குறிப்பிட்டனர். அவர்கள் கூறுகையில், “இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை உலக சுற்றுலா பயண சந்தை என்ற வர்த்தக கண்காட்சி நடக்கிறது. இதில் 100 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 பேர் தங்களின் சுற்றுலா சார்ந்த வர்த்தக பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர்.

அதில் புதுவை அரங்கும் இடம்பெற்றுள்ளது. இந்த அரங்கில் புதுவையில் உள்ள சுற்றுலா இடங்கள், பாராம்பரிய கட்டடங்கள், ஓட்டல்கள், வசதிகள் குறித்த விபரங்கள் இடம்பெறுகிறது. புதுவை பற்றிய சிறப்புகள் திரையிடப்பட உள்ளன. இந்த அரங்கை முதல்வர் ரங்கசாமி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். அதில் அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். லண்டன் கண்காட்சியை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சுற்றுலா சந்திப்பு நிகழ்ச்சியிலும் புதுவை எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்” என்று குறிப்பிட்டனர்.

தற்போது புதுச்சேரியில் பருவமழை அதிகரித்து மக்கள் பாதுகாப்பு பணிகளை அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் தலைமையில் நடந்து வருகிறது. இச்சூழலில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பயணம் செல்வது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, “எம்எல்ஏக்கள் வெளிநாடு செல்வதால் அவர்கள் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் அரசு துறையினர் அனைத்தையும் கவனிப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.