அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தம் எதிர்த்து தர்மயுத்தம்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

பெரியகுளம்: அதிமுகவின் அடிப்படை விதிகளை சிலர் சுயநலத்திற்காக திருத்தியுள்ளனர், அதை எதிர்த்து தர்மயுத்தம் துவக்கியுள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று மாலை சந்தித்தனர். பிறகு ஓபிஎஸ் பேசும்போது, ‘‘எந்த ஒரு தொண்டனும் கட்சியின் தலைமை பதவிக்கு வரமுடியும் என்ற எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்துத்தந்த கழக சட்ட விதிகளை சிலர் சுயநலத்திற்காக திருத்தியுள்ளனர்.

விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் என்பதற்காகவே தற்போது தர்ம யுத்தத்தை துவக்கியுள்ளோம். அவர்கள் செய்த விதிகளின் திருத்தத்தால் மிராசுதாரர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மட்டுமே கட்சியின் தலைமைப்பதவிக்கு வர முடியும். அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்துத்தந்த பாதையில் அனைவரும் செல்வோம். தவறான வழியில் செல்பவர்கள் ஊர் சென்று சேர முடியாது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.