டெல்டாவில் வெளுத்துக்கட்டும் மழை; 50,000 ஏக்கர் சம்பா மூழ்கியது: 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சி: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் 3வது நாளாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. நாகை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. திருவாரூர், முத்துப்பேட்டை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. புதுக்கோட்டையில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது. திருச்சி மாநகரில் இரவு பலத்த மழை பெய்தது. பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களிலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மழையின் காரணமாக திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் சுனாமி குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.
சீர்காழி அருகே எடக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கரைமேடு, கீழ கரைமேடு, பொட்டவெளி, கீழவெளி, சாந்தபுத்தூர் உள்ளிட்ட பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் நிரம்பி விட்டதால் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் வடிய தாமதமாகி வருகிறது. இதனால் கொள்ளிடம் ஒன்றியத்தில் 20ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சீர்காழி அருகே நாட்டுக்கன்னி மணி ஆற்றின் கரை திருவாலி பகுதியில் திடீரென உடைந்தது. இதனால் ஆற்றில் செல்லும் வெள்ளநீர் அருகே இருந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலத்தில் புகுந்தது. இதேபோல் தென்னாம்பட்டினம் ஊராட்சியில் கடல் நீர் ஆற்றின் வழியாக 300 ஏக்கர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் 750 ஏக்கர் விளை நிலங்களில் கடல் நீர் புகுந்ததால் விளைநிலங்கள் கடல் போல் காட்சி அளிக்கின்றன.

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டல், திட்டை, தில்லைவிடங்கன், கதிராமங்கலம், விளந்திட சமுத்திரம், அகனி, ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட ஊராட்சியில் தாழ்வான பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 20,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில், கூத்தாநல்லூர் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட 5000 ஏக்கர் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.டெல்டாவில் மொத்தம் 50,000 ஏக்கர் சம்பா மழை நீரில் மூழ்கி உள்ளது.

திருமுல்லைவாசல், தொடுவாய், பழையாறு, பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை ஊராட்சி தலைக்காடு கீழத்தெருவை சேரந்்த நாகூரான் என்பவரின் தொகுப்பு வீடு இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிய அவரது மனைவி ராஜகுமாரி(50), மகன் வீரசெல்வம்(24) ஆகியோர் காயமடைந்தனர், அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.