சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தற்போது குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6, 9-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 7, 8-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
5-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 9 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 8 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, தென்காசி மாவட்டம் சிவகிரி, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 8-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் வடமேற்கு பகுதிகளிலும், 9-ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.