ஆர்.டி.ஐ., தகவல்களை பெற மேளதாளத்துடன் வந்த ஆர்வலர்| Dinamalar

ஷிவ்புரி, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தான் கேட்ட தகவல்களைப் பெறுவதற்காக, அரசு அலுவலகத்துக்கு மாட்டு வண்டியில், மேளதாளத்துடன் சமூக ஆர்வலர் சென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள ஷிவ்புரி மாவட்டம் பைராட் நகரைச் சேர்ந்தவர் மக்கன் தக்கட். சமூக ஆர்வலரான இவர், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்த சில தகவல்களை கேட்டிருந்தார். ஆனால், அந்த தகவல்களை தருவதற்கு நகராட்சி நிர்வாகம் மறுத்தது.

இதையடுத்து குவாலியரில் உள்ள நகர்ப்புற நிர்வாகத் துறையில் மேல்முறையீடு செய்தார். உடனே, தக்கட் கேட்ட தகவல்களை தர உத்தரவிடப்பட்டிருந்தது.

அவர் கேட்ட விபரங்கள், 9,000க்கும் மேற்பட்ட பக்கங்களாக உள்ளதால், 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தும்படி நகராட்சி கூறியது. பணத்தை அவர் செலுத்தியதைத் தொடர்ந்து, அந்த ஆவணங்களை தர நகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுமையான போராட்டங்களுக்குப் பின், இந்த ஆவணங்கள் கிடைப்பது மக்கன் தக்கடுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து மாட்டு வண்டியில், மேளதாளங்கள் முழங்க நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று அந்த ஆவணங்களை அவர் பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பான படம், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.