கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் பகுதியில் விளை நிலங்களில் புகுந்து விளைபொருட்களை குரங்குகள் சேதப்படுத்தி வந்தன. இது குறித்து வனத்துறையினரிடம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில் மன்னவனூர் வனத்துறை ரேஞ்சர் நாதன் மற்றும் வன ஊழியர்கள் விலை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வந்த குரங்குகளை பிடிக்க கூண்டு வைத்தனர்.
தொடர்ந்து கூண்டில் சிக்கிய குரங்குகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விடுவித்தனர். இதே போன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் குரங்குகள் குறித்து விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம். விவசாயிகளின் புகாரின்பேரில், இதே போன்று கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.