காங்கிரஸ் ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கேஜிஎஃப் – 2 படத்தின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்திய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கி வைக்க, ட்விட்டர் நிறுவனத்திற்கு பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடங்கிய இந்திய ஒற்றுமைப் பயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைக் கடந்து, தற்போது, மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், இந்த யாத்திரையின் போது, கேஜிஎஃப் – 2 படத்தின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தி வீடியோவாக தயாரித்து காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடோ யாத்திரை ஆகியவற்றின் ட்விட்டர் கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதை அடுத்து, தங்கள் அனுமதி இன்றி கேஜிஎஃப் – 2 படத்தின் பாடலை பயன்படுத்தியதாக, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது, எம்ஆர்டி நிறுவனம் சார்பில் எம்.நவீன் குமார் என்பவர் புகார் அளித்தார்.

இந்நிலையில் இன்று, பெங்களூரு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், கேஜிஎஃப் – 2 படத்தின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கி வைக்க, ட்விட்டர் நிறுவனத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.