சேலம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு சேலத்தில் நிருபர்களிடம் கூறினார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக இருக்கிறது. சேலம் மாவட்டம் சங்ககிரியில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற ரூ.46 லட்சத்தை சங்ககிரி பெண் இன்ஸ்பெக்டர் தேவி, தனி ஆளாக மத்திய பிரதேசம் சென்று மீட்டு வந்துள்ளார். இது பாராட்டுக்குரியது. மோட்டார் வாகன சட்டம் மத்திய அரசு கொண்டு வந்தது. இதில், அபராதம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து வாக்குவாதம் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம்.
அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவோர், இதுபோன்று அபாயகரமாக வாகனம் ஓட்டுவோர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. யூனிபார்ம் போடாமல் வாகனம் ஓட்டுவோர், குடும்பத்தோடு செல்வோர்களுக்கு பெரிய தொந்தரவு கொடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு விட்டது. அதிக அபராத தொகை போட்டாலாவது தவறு செய்ய மாட்டார்கள் என்பதற்காக தொகையை அதிகரித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். கர்நாடக மாஜி போலீஸ் அதிகாரியான தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழக காவல்துறை பற்றி கடுமையாக விமர்சிக்கிறாரே என்ற கேள்விக்கு டிஜிபி பதில் அளிப்பதை தவிர்த்தார்.