மாஸ்கோ: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார். ரஷ்யாவும், உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உக்ரைன் – ரஷ்யா மோதல் உச்சத்தை எட்டி, அணு ஆயுத போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது. இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்று சென்றார். அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ்வை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ்: ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இணைவதற்கு ஈரான், அர்ஜென்டினா, அல்ஜீரியா உட்பட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக உறுப்பு நாடுகளுடன் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும். பிரிக்ஸில் புதிய நாடுகள் இணைவதை வரவேற்கிறோம். சர்வதேச அரங்கில் காலசூழ்நிலை மாறினாலும் ரஷ்ய, இந்திய நட்புறவு நீடித்து நிலைத்திருக்கிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்: ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், உக்ரைன் விவகாரம் பிரதான இடம்பிடித்தது. ரஷ்யாவும் உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை, இந்திய பிரதமர் மோடி சந்தித்தபோது, ‘‘இது போருக்கான காலம் அல்ல’’ என்று எடுத்துரைத்தார். இதையே இந்தியா இப்போதும் வலியுறுத்துகிறது. இந்தியா – ரஷ்யா நட்புறவு நிலையானது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.