ஓட்டல் சமையல் அறைகளில் சிசிடிவி பொருத்த கோரி வழக்கு: தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: ஓட்டல் உணவக சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதில் 12 சதவீதத்துக்கும் மேலான உணவகங்கள் தரமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்களில் உணவு விஷமாகி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளின் சமையலறைகளில் சிசிடிவி கேமரா பொருத்தி, வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில் ஒளிபரப்ப வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பவித்ரா ஆஜராகி, ‘‘பல உணவகங்களின் சமையலறைகள் குறைந்தபட்ச அளவில்கூட சுத்தமாக, சுகாதாரமாக இருப்பதில்லை. எனவே, உணவுப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தவும், உணவகங்களின் சமையலறைகளில் வெளிப்படைத்தன்மையுடன் உணவு தயாராகும் விதத்தை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும்’’ என கோரினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘பெரிய நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை ஊரின் தன்மைக்கேற்ப பல வகையான ஓட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில் மனுதாரரின் இந்த கோரிக்கை சாத்தியம் இல்லாதது’’ என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.