சென்னையில் கட்டுமான பணியின் போது 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை புழல் லட்சுமிபுரம் சப்தகிரி நகரை சேர்ந்தவர் டேனியல்(60). இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் இந்த கட்டிட பணியில் சென்னை கொரட்டூர் வச்சலா நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன்(51) என்ற கட்டிட தொழிலாளி வேலை செய்து வந்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பாலகிருஷ்ணன் கட்டிடத்தின் 2வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாலகிருஷ்ணனின் மகன் சதீஷ்குமார் புகழ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாலகிருஷ்ணனை வேலையில் ஈடுபடுத்தி அவரது உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக கூறி வீட்டு உரிமையாளர் டேனியல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வரதராஜன், பழனி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.